அன்பரீர் வணக்கம்.
உலக மொழிகளிலே மிகவும் மூத்ததும் முதன்மையானதும் பரந்துபட்ட இலக்கண இலக்கிய வளமும் சொல்நயம் பொருள்நயம் ஓசைநயம் முதலியவைகளும் கொண்டு, தனக்கு நேர் இல்லாததாக என்றும் நின்று நிலவுகின்ற தமிழ்மொழியைச் செந்தமிழணங்கை மனமொழி மெய்களால் வணங்கி வாழ்த்தி, யாப்பிலக்கணம் கற்கப் புகுவோமாக. புகுமுன்னே, இவ்வகுப்பிலே குற்றங் குறைகள் நேரின் அவை இச்சிறியேனையே சாரும். குற்றமும் குணமும் நாடிக் கொள்க.
இனி,
இலக்கணம் என்றால் என்ன எனின்?
ஒரு மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் துணைசெய்வது இலக்கணம் என்க.
தமிழிலே இலக்கணமாவது,
1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி
என ஐந்து வகைப்படும் என்பதும், அவற்றுள் நாம் எடுத்துக்கொண்டது யாப்பிலக்கணம் என்பதும் அறிக.
யாப்பிலக்கணம் என்றால் என்ன எனின்?
யாப்பு என்றால் செய்யுள் எனப் பொருள்படும். செய்யுள் இயற்றுதற்குத் துணைசெய்யும் இலக்கணம் யாப்பிலக்கணம் என்க.
யாப்பிலக்கணமாவது உறுப்பியல் செய்யுளியல் என இருவகைப்படும்.
உறுப்பியலில் செய்யுள் உறுப்புக்களின் இலக்கணமும், செய்யுளியலில் பாவும், பாவினமும் ஆகிய செய்யுட்களின் இலக்கணமும் கூறப்படும். இயல் என்றால் இலக்கணம் என்று பொருள்.
இனி,
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை
எனச் செய்யுள் உறுப்பு அறுவகைப்படும் என மனத்துள் நிறுத்துக.
ஆசிரியர்:
செ. வெங்கடேசு ஐயா அவர்கள்,
ஏகாபுரம்,
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment