பாடம் - 1
உறுப்பியல்
-------------------
செய்யுள் இயற்றுதற்கு உரிய உறுப்புக்களைப் பற்றிக் கூறும் பகுதிக்கு உறுப்பியல் என்று பெயர்.
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
எனச் செய்யுள் உறுப்புக்கள் அறுவகைப்படும். இவை காரணப் பெயர்கள் என்பர்.
எழுதப் படுதலின் எழுத்தே அவ்வெழுத்து
அசைத்து இசை கோடலின் அசையே அசை இயைந்து
சீர்கொள நிற்றலின் சீரே சீர் இரண்டு
தட்டு நிற்றலின் தளையே அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே அடி இரண்டு
தொடுத்தல் முதலாயின தொடையே அத்தொடை
பாவி நடத்தலின் பாவே பாவொத்து
இனமா நடத்தலின் இனம் எனப்படுமே.
என்பது இதனை விளக்கும் பழஞ்செய்யுள்.
1.எழுத்து
~~~
உயிரெழுத்து = அ முதல் ஔ வரை - 12
மெய்யெழுத்து = க் முதல் ன் வரை -18
உயிர்மெய் = க முதல் னௌ வரை - 216
ஆய்தம் = ஃ - 1
12 + 18 + 216 + 1 = 247. ஆகத் தமிழ் எழுத்துக்கள் இருநூற்று நாற்பத்தேழு.
உயிர் பன்னிரண்டில்,
அ, இ, உ, எ, ஒ - இவை ஐந்தும் உயிர்க்குறில்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - இவை ஏழும் உயிர்நெடில்
18 மெய்யோடும் 5 உயிர்க்குறிலும் தனித்தனியே சேர்வதால் (18×5=) 90 உயிர்மெய்க் குறில் ஆகும். இத்துடன் 5 உயிர்க்குறிலையும் சேர்த்தால் (90+5=) 95 குறில் ஆகும்
18 மெய்யோடும் 7 உயிர்நெடிலும் தனித்தனியே சேர்வதால் (18×7=) 126 உயிர்மெய் நெடில் ஆகும். இத்துடன் 7 உயிர்நெடிலையும் சேர்த்தால் (126+7=) 133 நெடில் ஆகும்
க, கி, கு, கெ, கொ - உயிர்மெய்க் குறில்
கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ - உயிர்மெய் நெடில்
மற்ற உயிர்மெய் எழுத்துக்களையும் இவ்வாறே கொள்க.
மெய் - 18
ஆய்தம் - 1
18+1=19
இப்பத்தொன்பதும் ஒற்று எனப்படும்.
குறில் - 95
நெடில் - 133
ஒற்று - 19
95+133+19 = 247
247 தமிழ் எழுத்துக்களும் யாப்பிலக்கணத்தில் குறில், நெடில், ஒற்று என மூவகையில் அடங்கும்.
இம்மூவகை எழுத்துக்களின் விளக்கத்தையும் நன்கு அறிந்துகொள்க.
ஆசிரியர்:
செ. வெங்கடேசு ஐயா அவர்கள்,
ஏகாபுரம்,
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment