பாடம் - 8
தளைத் தொடர்ச்சி
----------------------------
தளை தட்டுதல்
~~
இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அல்லாத வேறு தளைகள் வெண்பாவில் வரக்கூடா என்பது வெண்பா இலக்கணம். வெண்பாவில் பிற தளைகள் வருவது தளை தட்டுதல் எனப்படும்.
தட்டுதல் - தவறுதல்.வேறு தளை வருதல்.
ஐகாரக் குறுக்கம்
~~~~
ஐகாரம் (ஐ) நெடிலே யாயினும் அவ்வாறு தளை தட்டுமிடத்துத் தனிக்குறிலேபோல் பின்வரும் குறிலோடும் நெடிலோடும் கூடி நிரையசையாகும். இது ஐகாரக்குறுக்கம் எனப்படும்.
'ஐ' என்ற எழுத்தைத் தனித்துப் பலுக்கும்போது அது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும். ஐகாரத்தைச் சொல்லில் அமைத்து வழங்கினால் அது தன் மாத்திரையிலிருந்து குறைந்துவிடும்.
ஐகாரம் முதல், இடை, கடை என்ற மூவிடத்தும் குறுகும்.
ஐப்பசி, பையன் - முதலில் குறைந்தது
வளையல், படைப்பு - இடையில் குறைந்தது
கடை, மேகலை - கடையில் குறைந்தது
சொல்லின் முதலில் குறுகும்போது ஒன்றரை மாத்திரை பெறும் என்றும், இடையிலும் கடையிலும் குறுகும்போது ஒரு மாத்திரை பெறும் என்றும் கூறுவர்.(பொதுவாக யாப்பிலக்கணத்திலே ஐகாரம் சீரின் முதலில் வரின் நெடில் என்றும், இடையிலும் கடையிலும் வரின் குறில் என்றும் கொள்க.)
காட்டு 

புன்னைப் பொழிலருகே போயினாள் பூங்கொம்பர்
தன்னையருங் காணத் தளர்ந்து.
இவ்வெண்பாவில் 'தன்னையரும்' என்னும் சீரை,
தன்/னைய/ரும்
நேர்/நிரை/நேர்
கூ/விளங்/காய்
னைய - இருகுறில் - நிரை.
என அலகிட வேண்டும்.
இவ்வாறு கொள்ளாமல் 'தன்/னை/யரும் என அலகிட்டால் 'நேர் நேர் நிரை' எனத் தேமாங்கனி ஆகும். கனிச்சீர் வெண்பாவில் வரக்கூடாது
தன்/னை/யரும் கா/ண
நேர்/நேர்/நிரை நேர்/நேர்
தே/மாங்/கனி தே/மா
எனக் கனிமுன் நேர் வந்து ஒன்றாத வஞ்சித் தளையாகும். வெண்பாவில் வஞ்சித்தளை வரக்கூடாது.
ஆய்தம் அலகு பெறுதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தளை தட்டுமிடத்து ஆய்தம் குறிலே போல அலகுபெறும். தளை தட்டாத இடத்து ஒற்றுப்போல் ஆகும்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
தீர்த்/தல் அஃ/தொரு/வன்
நேர்/நேர் நேர்/நிரை/நேர்
தே/மா கூ/விளங்/காய்
என, ஆய்தத்தை ஒற்றுப்போல் அலகிட்டால் மாமுன் நேர் வந்து 'நேரொன்றாசிரியத்தளை' யாகும். ஆசிரியத்தளை வெண்பாவில் வரக்கூடாது. எனவே, ஆய்தத்தைக் குறிலாகக் கொண்டால் 'அஃ' என்பது 'அகு' என்பது போல இருகுறிலாய் நிரையசையாகி,
தீர்த்/தல் அஃ/தொரு/வன்
நேர்/நேர் நிரை/நிரை/நேர்
தே/மா கரு/விளங்/காய்
என மாமுன் நிரை வந்து 'இயற்சீர் வெண்டளை'யாகும்.
'நடுவின்றி நன்பொருள் வெஃகின்' (குறள்.171) எனத் தளை தட்டாத இடத்து ஆய்தம் ஒற்றுப்போல் நிற்கும்.
இவற்றை மனத்துள் நிறுத்துக.
(சிறுபான்மையாகப் பயிலும் சில நெறிகளை மேலே சொல்வாம்)
ஆசிரியர்:
செ. வெங்கடேசு ஐயா அவர்கள்,
ஏகாபுரம்,
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment