பாடம் - 4
சீர்
----
அசைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது சீர் எனப்படும். அச்சீர் ஈரசைச்சீர், மூவசைச்சீர், என இருவகைப்படும்.
ஈரசைச்சீர் - 4
~~
நேர், நிரை என்னும் அசை இரண்டினையும் பெருக்கினால் (2×2=4) ஈரசைச்சீர் நான்காகும்.
நேர் நேர் - தேமா
நிரை நேர் - புளிமா
நிரை நிரை - கருவிளம்
நேர் நிரை - கூவிளம்
இவ்வீரசைச் சீர்கள் நான்கும் ஆசிரியப்பாவுக்கு உரியவை. இவை இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், அகவற்சீர் எனவும் பெயர் பெறும்.
தேமா, புளிமா எனும் இவ்விரண்டும் 'மாச்சீர்' எனவும்,
கருவிளம், கூவிளம் எனும் இவ்விரண்டும் 'விளச்சீர்' எனவும் வழங்கப்பெறும்.
மாச்சீர் - நேரீற்று ஈரசைச்சீர்
விளச்சீர் - நிரையீற்று ஈரசைச்சீர்

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் எனும் இவை வாய்பாடுகளாகும். வாய்பாடுகளை அசை பிரித்தால் சீர்கள் வந்துவிடும்.
தே/மா
நேர்/நேர்
புளி/மா
நிரை/நேர்
கரு/விளம்
நிரை/நிரை
கூ/விளம்
நேர்/நிரை.
இஃது இனிவரும் வாய்பாடுகளுக்கும் பொருந்தும். இவ்வாய்பாடுகள் 'தளை' இலக்கணத்திற்கு முதன்மையானவை. இவற்றை நன்கு மனத்துள் நிறுத்துக.
மூவசைச்சீர் - 8
~~~
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் எனும் ஈரசைச் சீர்கள் நான்கனோடும் நேரசை நிரையசை இரண்டினையும் தனித்தனியே சேர்த்தால் மூவசைச்சீர் (4×2=8) எட்டாகும்.
நேர் நேர் நேர் - தேமாங்காய்
நிரை நேர் நேர் - புளிமாங்காய்
நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நேர் நிரை நேர் - கூவிளங்காய்
இவை நான்கும் நேரீற்று மூவசைச்சீர். இவை காய்ச்சீர் எனவும், வெண்சீர் எனவும் வழங்கப்பெறும். இவை வெண்பாவுக்கு உரியவை.
நேர் நேர் நிரை - தேமாங்கனி
நிரை நேர் நிரை - புளிமாங்கனி
நிரை நிரை நிரை - கருவிளங்கனி
நேர் நிரை நிரை - கூவிளங்கனி
இவை நான்கும் நிரையீற்று மூவசைச்சீர். இவை கனிச்சீர் எனவும், வஞ்சிச்சீர் எனவும் வழங்கப்பெறும். இவை வஞ்சிப்பாவுக்கு உரியவை.
ஆசிரியர்:
செ. வெங்கடேசு ஐயா அவர்கள்,
ஏகாபுரம்,
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment