Sunday, November 27, 2022

பயிற்சி: குறள் வெண்பா

 குறள் வெண்பா

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

1. குறள் வெண்பா ஈரடியால் அமையும்

2. முதலடி அளவடியாகவும், ஈற்றடி சிந்தடியாகவும் வரும். அதாவது முதலடியில் நான்கு சீரும், இரண்டாம் அடியில் முச்சீரும் வரும்

3. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டும் வரும்

4. நாள் மலர் காசு பிறப்பு வாய்பாட்டால் முடியும்

குறிப்பு 👇

குறள் வெண்பா இரண்டடிகளே கொண்டதாகையால், குறள்வெண்பாவின் ஈற்றடியில் பொழிப்பு மோனை அமைத்தே பாடவேண்டும் என்றால் பொருட்செறிவு குன்றலாம். அதனால் அவ்வீற்றடியில் மோனை வரவில்லை என்றாலும் குற்றமில்லை.

இதனால் மோனை வரவே வேண்டியதில்லை எனக் கருத வேண்டா. 

பொருட்செறிவு குன்ற வலிந்து மோனையமைக்க வேண்டியதில்லை என்பதே. மோனை வரின் சிறப்பு. வரவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், வெண்டளை பிழையாது, செப்பலோசையுடன் அமைய வேண்டும். திருக்குறள் வெண்பாக்களில் பெரும்பாலும் இவ்வாறு அமைந்திருத்தல் இக்காரணம் பற்றியேயாம்.


காட்டு👇

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகெலாம்

பேரறி வாளன் திரு

இது அடியெதுகையும், முதலடி  ஒரூஉ மோனையும், ஈற்றடி பொழிப்பு மோனை பெறாதும் வந்த குறள்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 

நிலமிசை நீடுவாழ் வார்

இது அடியெதுகையும், முதலடியில் பொழிப்பு மோனையும், ஈற்றடியில் இணைமோனையும் பெற்று வந்த குறள்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத்  தலை

இது அடியெதுகையும், இரண்டடியிலும் பொழிப்பு மோனையும் பெற்று வந்த குறள்

அன்பர்கள் பயிலும் காலம் என்பதால் எதுகை  மோனை அமைத்தே எழுதிப் பழகுக.


ஆசிரியர்

செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 

ஏகாபுரம், 

சேலம் மாவட்டம். 

வெண்பாவின் இலக்கணம்

 வெண்பாவின் இலக்கணம்

----------------------------------------------

வெண்பாவானது, குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவியல் வெண்பா, பஃறொடை வெண்பா என நான்கு வகைப்படும்.

1. வெண்பாவில் இயற்சீர் நான்கும், வெண்சீர் நான்கும் வரும்

2. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டும் வரும்

3. ஈற்றடி சிந்தடியாகவும், ஏனையடி அளவடியாகவும் வரும்

4. நாள், மலர், காசு, பிறப்பு வாய்பாட்டால் முடியும்

இவை நான்குக்கும் பொதுநெறி.


குறிப்பு 👇

வெண்பாவில் கனிச்சீர் நான்கும் வரக்கூடாது. 

இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளையன்றி, வேறு தளைகளும் வருதல் கூடா. 

அளவடி சிந்தடியன்றி, வேறு அடிகளும் வாரா. 

வெண்பாவின் அளவடிகளில் பொழிப்பு மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரலாம்.

சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்பு மோனை வரவேண்டும். அதாவது முச்சீரடியாகிய அதன் முதற்சீரிலும் ஈற்றுச்சீரிலும் மோனை வரவேண்டும்.

இவற்றை நினைவில் கொள்க.


ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

Saturday, November 26, 2022

பாடம் - 13: செய்யுளியல்

 பாடம் - 13


செய்யுளியல்

----------------------


செய்யுள் இயல் என்பது செய்யுளின் இலக்கணம் கூறுவது என்று பொருள். உறுப்பியலில் கூறிய எழுத்து, அசை  முதலிய அறுவகை உறுப்புக்களினால், சொற்செறிவும் பொருட்செறிவும் பொருந்தச், சொல்லணியும் பொருளணியும் அமையத், தொடையின்பமும் நடையின்பமும் நிறைந்த ஓசை நலத்துடன் செய்வது செய்யுள் ஆகும்.

யாப்பிலக்கணத்தில் செய்யுளைப் 'பா' என்று வழங்குதல் மரபு.  பாவும் பாவினமும் எனச் செய்யுள் இருவகைப்படும். 

பா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் 'பா' நான்கு வகைப்படும். ஆசிரியப்பா 'அகவற்பா' எனவும் பெயர்பெறும்.  கடைச்சங்க காலத்தும், அதற்கு முற்காலத்தும் இந்த நால்வகைப் பாக்களே பாடலில் பயின்று வந்தன.

பாவினம் - தாழிசை, துறை, விருத்தம் எனப் பாவினம் மூன்று வகைப்படும். 

பா இனம் - பாவினது இனம். 

இவை மூன்றையும் பா நான்குடன் உறழப் பாவினம் (4×3=12) பன்னிரண்டாகும்.

அவையாவன:

1. வெண்டாழிசை

2. வெண்டுறை

3. வெளிவிருத்தம்

4. ஆசிரியத்தாழிசை

5. ஆசிரியத்துறை

6. ஆசிரிய விருத்தம்

7. கலித்தாழிசை

8. கலித்துறை

9. கலிவிருத்தம்

10. வஞ்சித்தாழிசை

11. வஞ்சித்துறை

12. வஞ்சி விருத்தம்


குறிப்பு 👇

உறுப்பியலில் கூறிய அறுவகை உறுப்புக்களில் எழுத்து, அசை, தொடை என்னும் மூன்றும் எல்லாப் பாக்களுக்கும் பாவினங்களுக்கும் பொது.

சீர், தளை, அடி என்னும் மூன்று உறுப்பினைக் கொண்டே 'பா' வேறுபாடு அமைவதாகும். இதனை எப்போதும் மனத்துள் கொள்க.

ஓசை

~~~~

பழந்தமிழ்ப் புலவர்கள் ஓசை வேறுபாடு கொண்டே பா வேறுபாடு கண்டனர். 

செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை எனச் செய்யுளோசை நான்கு வகைப்படும்.

1. செப்பலோசை  - இருவர் உரையாடல் போன்ற ஓசை

2. அகவலோசை  - ஒருவர் பேசுதல் போன்ற, சொற்பொழிவாற்றுதல் போன்ற ஓசை

3. துள்ளலோசை  - கன்று துள்ளினாற் போலச் சீர்தோறும் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்துயர்ந்து வருவது.

4. தூங்கலோசை  - சீர்தோறும் துள்ளாது தூங்கிவரும் ஓசை. அதாவது தாழ்ந்தே வருவது. 

👇

வெண்பா - செப்பலோசை யுடையது

ஆசிரியப்பா - அகவலோசை யுடையது

கலிப்பா - துள்ளலோசை யுடையது

வஞ்சிப்பா - தூங்கலோசை யுடையது

👇

இருவகை வெண்டளையானும் வருவது செப்பலோசை

இருவகை ஆசிரியத்தளையானும் வருவது அகவலோசை

கலித்தளையான் வருவது துள்ளலோசை

இருவகை வஞ்சித்தளையானும் வருவது தூங்கலோசை

இதனை நினைவில் கொள்க.


ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

Wednesday, November 23, 2022

​பாடம் - 12: தொடைத் தொடர்ச்சி

பாடம் - 12


தொடைத் தொடர்ச்சி 
-----------------------------------

உறழ்ச்சித்தொடை
~

இரண்டடிகளில் மோனை முதலிய தொடைகள் வருதல் 'முதற்றொடை' எனப்படும். ஓரடியில் உள்ள சீர்களில் மோனை முதலிய தொடைகள் வருதல் 'உறழ்ச்சித்தொடை' எனப்படும். உறழ்ச்சித்தொடை அளவடியிலேயே கொள்ளப்படும். அளவடி - நாற்சீரடி

அடிகளின் முதற்சீரில் மோனை முதலியன வருவது

1. அடிமோனை
2. அடியெதுகை
3. அடிமுரண்
4. அடியியைபு
5. அடியளபெடை

எனப்படும். இயைபுத்தொடை இறுதிச் சீர்களில் கொள்ளப்படும்.

ஓரடியின் சீர்களில் வரும் உறழ்ச்சித்தொடை,

1. இணை
2. பொழிப்பு
3. ஒரூஉ
4. கூழை
5. மேற்கதுவாய்
6. கீழ்க்கதுவாய்
7. முற்று
8. கடையிணை
9. கடைக்கூழை
10. இடைப்புணர்
11. பின்

எனப் பதினொரு வகைப்படும்.

இப்பதினொன்றையும் மோனை முதலிய முதற்றொடை ஐந்தனோடும் உறழ்ந்தால் (5×11=55)  உறழ்ச்சித்தொடை ஐம்பத்தைந்தாகும். உறழ்தல் - பெருக்குதல்.

👇

ஓர் அளவடியிலே,

முதல் இரு சீர்களில் மோனை வருவது இணைமோனை

முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் வருவது பொழிப்பு மோனை 

சுருங்கச் சொன்னால்...

1 , 2  சீர்களில் வருவது   -  இணை
1 , 3  சீர்களில் வருவது  - பொழிப்பு
1, 4   சீர்களில் வருவது   - ஒரூஉ
1, 2, 3 சீர்களில் வருவது - கூழை
1, 3, 4 சீர்களில் வருவது - மேற்கதுவாய்
1, 2, 4 சீர்களில் வருவது - கீழ்க்கதுவாய்
1, 2, 3, 4 சீர்களில் வருவது - முற்று

(இவை ஏழும் முதலிலிருந்து எண்ணப்படும்)

3, 4  சீர்களில் வருவது - கடையிணை
2, 3, 4 சீர்களில் வருவது - கடைக்கூழை
2, 3 சீர்களில் வருவது - இடைப்புணர்
2, 4 சீர்களில் வருவது  - பின்

(இவை நான்கும் கடையிலிருந்து எண்ணப்படும்)

இவ்வாறே ஏனைய எதுகை முதலிய நான்கு தொடைகளுக்கும் கொள்க.

குறிப்பு 👇

பெரும்பாலும் மோனையிலேயே இத்தொடைகள் வரும். 

இவற்றுள் 'பொழிப்பு' மோனையே சிறந்ததாகும். அடுத்தது 'ஒரூஉ' மோனை.

இவை அளவடியிலேயே கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்க.

👇

மோனை சீர்மோனையாகவே வரும். அதாவது ஓரடியிலுள்ள சீர்களில் மோனை வருதல். 
மோனை - முதலெழுத்து ஒன்றி வருதல்

எதுகை அடியெதுகையாகவே வரும். அதாவது இரண்டடிகளின் முதற்சீரில் எதுகை வருதல்.
எதுகை - இரண்டாமெழுத்து ஒன்றி வருதல்

நேரிசை வெண்பாவின் இரண்டாமடியில் ஒரூஉ எதுகை வரும். ஏனையடிகளிலும் பாக்களிலும் ஒரூஉ எதுகை 'அருகி' வரும்.
அருகி வருதல் - மிகச் சிறுபான்மை வருதல்.

அன்பரீர், 

இவ்வளவிலே நாம் உறுப்பியலை முடித்துக்கொண்டு, அடுத்துச் செய்யுளியலில் புகுவோமாக.


ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

Saturday, November 19, 2022

பாடம் - 11: தொடைத் தொடர்ச்சி

 பாடம் - 11


தொடைத் தொடர்ச்சி
-----------------------------------

தொடைச்சிறப்பு

மோனை
~~~

முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு, முதலெழுத்து 'வந்த எழுத்தே  வருதலன்றி, இனவெழுத்தும் வரும். அது 'இனமோனை' எனப்படும்.

இனவெழுத்துக்கள்
*

உயிர்

அ, ஆ, ஐ, ஔ    - ஓரினம்
இ, ஈ, எ, ஏ         -  ஓரினம்
உ, ஊ, ஒ, ஓ    - ஓரினம்

மெய்

ஞ் , ந்   - ஓரினம்
ம்,  வ்  - ஓரினம்
த், ச்    - ஓரினம்

மொழிக்கு முதலில் மெய்யெழுத்து வாராதாகையால், ஞ் ந் ம் வ் த் ச் என்னும் மெய்களை ஞ ஞா ஞி ஞீ முதலிய உயிர்மெய்யாகக் கொள்க. 

ஞ ந ம வ த ச என்னும் ஆறும் அல்லாத மற்ற மெய்கள் அதற்கதுவே மோனையாக வரும்.

மெய்யெழுத்துக்கள் இவ்வாறு இனமாக வருவதோடு, அம்மெய்களின் மேல் ஏறிய உயிர்களும் 'அ ஆ ஐ ஔ' என இனமாகவே வரவேண்டும். 'அ ஏ இ உ' என மாறி வருதல் கூடாது.

'யா'  இ ஈ எ ஏ - ஓரினமாகும். 

புதியன புகுதலாக  'யா, அ ஆ ஐ ஔ' ஓரினமாதலும் கொள்க.

கீழ்வரும் எடுத்துக்காட்டுக்களை நன்கு கவனித்துப் பார்த்து, மோனை இனமோனைகளைக் கண்டுகொள்க.

காட்டு 👇

அன்புக்கு முண்டோ அடைக்குந்தாழ் - அ, அ

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் - ஐ, ஆ, அ

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் - இ, எ, இ

உரென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் - உ, ஓ

(உயிர் தனித்து மோனையாக வந்தது தனிமோனை (அ, அ).
மற்றவை இனமோனை.)

👇

ஞாலத் துயிர்தளிர்ப்ப நல்குமே  - ஞா, ந

நீலச் சுனையில் ஞிமிறார்ப்ப - நீ, ஞி

மையுற்ற கண்ணருவி வார வளைசோர - மை, வா, வ

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன - வெ, மெ

துடியா நெடிதுயிராச் சோர்ந்து - து, சோ

சாரு மிடவற்றுத் தானில்லை - சா, தா

(ஞந, மவ, தச என்பன உயிரோடு கூடி இனமோனையாக வந்தன.)

👇

ஞாயிறு போய்ப்பட்ட ஞாட்பினுள் - ஞா, ஞா

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து - நி, நி

மங்கல மென்ப மனைமாட்சி - ம,ம

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வை,வா,வா

துன்னியார் குற்றமும் தூற்று மரபினார் - து, தூ

சிறப்பீனும் செல்வமும் ஈனும் - சி, செ

(ஞந, மவ, தச என்பன அதற்கதுவே மோனையாக வந்தன)

👇

பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் - ப,ப

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு - கு, கு, கு

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் - கொ, கு

(பிற மொழிகள் அதற்கதுவே மோனையாக வந்தன)

👇

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் - யா, இ, எ

யா , இ, எ - மோனை

யானையொடு வீழ்ந்தான் அவன் - யா, அ

யா, அ - மோனை.


எதுகை
~~

எதுகைக்கு மெய்யெழுத்து வந்ததே வரவேண்டும். உயிர்மெய் எழுத்தாயின் வெவ்வேறு உயிரும் வரலாம். இனவெழுத்து வரவேண்டும் என்பதில்லை. ஆனால், நெடிலுக்கு நெடிலும், குறிலுக்குக் குறிலும் வரவேண்டும்.

காட்டு 👇

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல

குஞ் - மஞ் என வந்த மெய்யே வந்தது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொறி - நெறி என வந்த உயிரே வந்தது

ஆயிடை யின்னணம் வருந்தி யன்புகூர்
வேயுறழ் தோளியைப் பிரிந்து வெஞ்சின
மாயவெங் கொடுங்கலி வயத்த னாகினான்

ஆயி - வேயு - மாய.
யி - யு - ய  எதுகை

இவற்றை மனத்துள் நிறுத்துக.


ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

​பாடம் -10: தொடை

பாடம் -10


தொடை
--------------

அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடை எனப்படும். இரண்டு அடிகளிலே அன்றி, ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.

செய்யுளின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை உறுப்பு மிகவும் இன்றியமையாததாகும். 
'தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்' என்னும் பழமொழி இதனை விளக்கும்.

தொடையானது முதல்தொடை, உறழ்ச்சித்தொடை என இருவகைப்படும்.

அடிகளில் வருவது முதல்தொடை. ஓரடியிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை.

முதல்தொடை
-----------------------

1. மோனைத்தொடை
2. எதுகைத்தொடை
3. முரண்தொடை
4. இயைபுத்தொடை
5. அளபெடைத்தொடை

என முதல்தொடை ஐந்து வகைப்படும்.

மோனைத்தொடை
~

இரண்டு அடிகளில் முதற்சீரின் முதலெழுத்து, அல்லது  ஓரடியிலுள்ள சீர்களின் முதலெழுத்து ஒன்றி வருதல் மோனை எனப்படும். அடிகளில் மோனை வருதல் 'அடிமோனை' எனவும், சீர்களில்  மோனை வருதல் 'சீர்மோனை' எனவும் பெயர்பெறும். ஏனைய எதுகை முதலிய தொடைகளுக்கும் இது பொருந்தும்.

ஒன்றுதல் - ஒரே எழுத்து வருதல்.

காட்டு 👇

'செந்தமிழைக் கற்றுத் தெளியா மகனொருவன்
செந்தமிழன் ஆவனோ தேமொழீ'

இவ்வடிகளின் முதற்சீரின் முதலெழுத்து 'செ' ஒன்றி வந்திருத்தல் 'அடிமோனை' யாகும்.

'மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிரா'

இவ்வடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து 'ம' ஒன்றி வந்திருத்தல் 'சீர்மோனை' யாகும்.

எதுகைத்தொடை
~~~~

இரண்டாவது   எழுத்து ஒன்றி வருதல் எதுகையாகும்.

காட்டு 👇

'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு 
புண்ணுடையர் கல்லா தவர்'

இவ்வடிகளின் முதற்சீரில் இரண்டாவது எழுத்து 'ண்' ஒன்றி வந்திருத்தல் எதுகையாகும்.

'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு'

இவ்வடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து 'து' வந்திருத்தல் மோனை.
இரண்டாவது எழுத்து 'ப்' வந்திருத்தல் எதுகை.

முரண்தொடை
~~~

முரணத் தொடுப்பது முரண் தொடையாகும்.

முரணுதல் - மாறுபடுதல்.
மாறுபட்ட சொற்கள் வருதல் முரண்தொடை.

காட்டு 👇

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'
முன் × பின்  - முரண்

'வெண்பற் கருங்குழலார் மேலிருந்து கீழ்நோக்கி'

வெண்மை × கருமை - முரண்
மேல் × கீழ்  - முரண்
  
இயைபுத்தொடை
~

இரண்டு அடிகளின் இறுதி ஒன்றி வருதல் இயைபுத் தொடையாகும். 

காட்டு 👇

'வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்'

'கொஞ்சும் - கெஞ்சும்' என்பது இயைபுத் தொடை. இத்தொடை பெரும்பாலும் இசைப்பாடல்களில் வரும்.

அளபெடைத்தொடை
~~~

அளபெடுத்து ஒன்றி வருதல் அளபெடைத் தொடையாகும்.

காட்டு 👇

'ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்'

'ஓஒ - ஆஅ'  என அளபெடுத்ததால் இது அளபெடைத் தொடையாகும்.

குறிப்பு 👇

மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் தொடை ஐந்தில்,  'மோனையும் எதுகையும்' மிகவும் இன்றியமையாதவை என அறிக.

இவற்றை மனத்துள் நிறுத்துக.

ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

Tuesday, November 15, 2022

பாடம் - 9: அடி

பாடம் - 9


அடி
------ 
சீர்கள் இரண்டு முதலாக இணைந்து (தொடர்ந்து)  நடப்பது அடி எனப்படும்.

அடி ஐந்து வகைப்படும். 

ஓர் அடியில்,

இருசீர் இருப்பின் - குறளடி
முச்சீர் இருப்பின் - சிந்தடி
நாற்சீர் இருப்பின் - அளவடி
ஐஞ்சீர் இருப்பின் - நெடிலடி 

அறுசீரும் அதற்கு மேலும் இருப்பின் - கழிநெடிலடி

கழிநெடிலடி அவ்வடியிலுள்ள சீர்களின் தொகைப் பெயரோடு சேர்ந்து, அறுசீர்க் கழிநெடிலடி, எழுசீர்க் கழிநெடிலடி என வழங்கும்.

காட்டு 👇

நிலாநிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா

இது குறளடியால் வந்தது.


கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு

இது சிந்தடியால் வந்தது.


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே

இது அளவடியால் வந்தது


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.

இது நெடிலடியால் வந்தது


வெய்யிற் கேற்ற நிழலுண்டு
   வீசும் தென்றற் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
  கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வளமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ

இது அறுசீர்க் கழிநெடிலடியால் வந்தது


ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

இது எழுசீர்க் கழிநெடிலடியால் வந்தது


காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
  கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
  தொட்டவிடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
  மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
    தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்

இது எண்சீர்க் கழிநெடிலடியால் வந்தது

(செய்யுட்களைப் படிக்கும்போது இவ்வடிகளைப் பார்த்துப் பழகுக)

ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

பாடம் - 8: தளைத் தொடர்ச்சி

 பாடம் - 8


தளைத் தொடர்ச்சி 
----------------------------

தளை தட்டுதல்
~~

இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அல்லாத வேறு தளைகள் வெண்பாவில் வரக்கூடா என்பது வெண்பா இலக்கணம். வெண்பாவில் பிற தளைகள் வருவது தளை தட்டுதல் எனப்படும்.

தட்டுதல் - தவறுதல்.வேறு தளை வருதல்.

ஐகாரக் குறுக்கம்
~~~~

ஐகாரம் (ஐ) நெடிலே யாயினும் அவ்வாறு தளை தட்டுமிடத்துத் தனிக்குறிலேபோல் பின்வரும்  குறிலோடும் நெடிலோடும் கூடி நிரையசையாகும். இது ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

'ஐ' என்ற எழுத்தைத் தனித்துப் பலுக்கும்போது அது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும். ஐகாரத்தைச் சொல்லில் அமைத்து வழங்கினால் அது தன் மாத்திரையிலிருந்து குறைந்துவிடும்.

ஐகாரம் முதல், இடை, கடை என்ற மூவிடத்தும் குறுகும்.

ஐப்பசி, பையன் - முதலில் குறைந்தது
வளையல், படைப்பு - இடையில் குறைந்தது 
கடை, மேகலை - கடையில் குறைந்தது

👉 சொல்லின் முதலில் குறுகும்போது ஒன்றரை மாத்திரை பெறும் என்றும், இடையிலும் கடையிலும் குறுகும்போது ஒரு மாத்திரை பெறும் என்றும் கூறுவர்.

(பொதுவாக யாப்பிலக்கணத்திலே  ஐகாரம் சீரின் முதலில் வரின் நெடில் என்றும், இடையிலும் கடையிலும் வரின் குறில் என்றும் கொள்க.)

காட்டு 👇

புன்னைப் பொழிலருகே போயினாள் பூங்கொம்பர்
தன்னையருங் காணத் தளர்ந்து.

இவ்வெண்பாவில் 'தன்னையரும்' என்னும் சீரை,

தன்/னைய/ரும்
நேர்/நிரை/நேர்
கூ/விளங்/காய்

னைய - இருகுறில் - நிரை.

என அலகிட  வேண்டும். 

இவ்வாறு கொள்ளாமல்  'தன்/னை/யரும் என அலகிட்டால்  'நேர் நேர் நிரை'  எனத் தேமாங்கனி ஆகும். கனிச்சீர் வெண்பாவில் வரக்கூடாது

தன்/னை/யரும்      கா/ண
நேர்/நேர்/நிரை     நேர்/நேர் 
தே/மாங்/கனி         தே/மா

எனக் கனிமுன் நேர் வந்து ஒன்றாத வஞ்சித் தளையாகும். வெண்பாவில் வஞ்சித்தளை வரக்கூடாது.


ஆய்தம் அலகு பெறுதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தளை தட்டுமிடத்து  ஆய்தம் குறிலே போல அலகுபெறும். தளை தட்டாத இடத்து ஒற்றுப்போல் ஆகும். 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

தீர்த்/தல்      அஃ/தொரு/வன்
நேர்/நேர்      நேர்/நிரை/நேர்
தே/மா            கூ/விளங்/காய்

என, ஆய்தத்தை ஒற்றுப்போல் அலகிட்டால் மாமுன் நேர் வந்து  'நேரொன்றாசிரியத்தளை' யாகும். ஆசிரியத்தளை வெண்பாவில் வரக்கூடாது. எனவே, ஆய்தத்தைக் குறிலாகக் கொண்டால்  'அஃ'  என்பது    'அகு' என்பது போல இருகுறிலாய் நிரையசையாகி,

தீர்த்/தல்      அஃ/தொரு/வன்
நேர்/நேர்      நிரை/நிரை/நேர் 
தே/மா           கரு/விளங்/காய்

என மாமுன் நிரை வந்து 'இயற்சீர் வெண்டளை'யாகும். 


'நடுவின்றி நன்பொருள் வெஃகின்' (குறள்.171) எனத் தளை தட்டாத இடத்து ஆய்தம் ஒற்றுப்போல் நிற்கும்.


இவற்றை மனத்துள் நிறுத்துக.
  
(சிறுபான்மையாகப் பயிலும் சில நெறிகளை மேலே சொல்வாம்)

ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

Tuesday, November 8, 2022

​பாடம் - 7: தளைத் தொடர்ச்சி

பாடம் - 7


தளைத் தொடர்ச்சி
-----------------------------

ஆசிரியத்தளை
~~~

மாச்சீர்முன் நேர் வருவது - நேரொன்றாசிரியத்தளை

விளச்சீர் முன் நிரை வருவது - நிரையொன்றாசிரியத்தளை

தேமா, புளிமா இரண்டும் நேரீற்று ஈரசைச்சீர் என்பதையும், கருவிளம் கூவிளம் இரண்டும் நிரையீற்று ஈரசைச்சீர் என்பதையும் நினைவுகூர்க.

மாமுன் நேர் - நேர் முன் நேர்
விளமுன் நிரை - நிரை முன் நிரை.

காட்டு  👇

'சீரைத் தேடின் ஏரைத் தேடு'

சீ/ரைத்       தே/டின்
நேர்/நேர்     நேர்/நேர்
தே/ மா         தே/மா

ஏ/ரைத்          தே/டு
நேர்/நேர்       நேர்/நேர்
தே/மா           தே/மா

இது 'மா' முன் நேர் வந்ததால் நேரொன்றிய ஆசிரியத்தளை.

'அறம்செய விரும்பு'

அறம்/செய       விரும்/பு
நிரை/நிரை       நிரை/நேர்
கரு/விளம்         புளி/மா

இது விளம் முன் நிரை வந்ததால் நிரையொன்றிய ஆசிரியத்தளை.

👉 இவ்விரு தளைகளும் ஆசிரியப்பாவில் பயின்றுவரும்.

குறிப்பு👇

இவ்வாறு சீர்களை அசைபிரித்து வாய்பாடு கண்டு, தளை கொள்ளுதல் 'அலகிடுதல்' எனப்படும் என அறிக.


இயற்சீர் வெண்டளை
~~~

மாமுன்  நிரையும், விளமுன் நேரும் வருவது 'இயற்சீர் வெண்டளை' யாகும்.
அஃதாவது, முற்கூறிய ஆசிரியத் தளையிலிருந்து மாறி வருவது 'இயற்சீர் வெண்டளை' எனப்படும். நின்றசீர் இயற்சீரானதால் இயற்சீர் வெண்டளை எனப்பட்டது. வருஞ்சீர் காய்ச்சீராகவும் இருக்கலாம். ஆனால், வருஞ்சீரின் முதலசையே நாம் பார்க்க வேண்டியது என அறிக.

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும்  நான்கே இயற்சீராகும்.

ஆசிரியத்தளை நேருக்கு நேரும், நிரைக்கு நிரையும் வருவது.
இயற்சீர் வெண்டளை நேருக்கு நிரையும், நிரைக்கு நேருமாக, ஆசிரியத்தளையிலிருந்து மாறி வருவது.

காட்டு 👇

'வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி'

வாழ்/க          தமிழ்/மொழி
நேர்/நேர்       நிரை/நிரை
தே/மா            கரு/விளம்

தமிழ்/மொழி     வாழ்/க
நிரை/நிரை       நேர்/நேர்
கரு/விளம்          தே/மா

மாமுன் நிரையும், விளமுன் நேரும் வந்ததால் இது 'இயற்சீர் வெண்டளை' யாகும்.

வெண்சீர் வெண்டளை
~~~~

காய்ச்சீர் முன் நேர்  வருவது 'வெண்சீர் வெண்டளை' யாகும்.

காட்டு 👇

'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்'

கெட்/டா/லும்       மேன்/மக்/கள்
நேர்/நேர்/நேர்     நேர்/நேர்/நேர்
தே/மாங்/காய்       தே/மாங்/காய்

மேன்/மக்/க         ளே/சங்/கு
நேர்/நேர்/நேர்      நேர்/நேர்/நேர்
தே/மாங்/காய்       தே/மாங்/காய்

சுட்/டா/லும்        வெண்/மை   தரும்
நேர்/நேர்/நேர்     நேர்/நேர்      நிரை
தே/மாங்/காய்    தே/மா         மலர்

இதில், காய்முன் நேர் வந்ததால் வெண்சீர் வெண்டளையாகும்

👉 மேலும், 'வெண்மை தரும்' என்பதிலே மாமுன் நிரை வந்தது இயற்சீர் வெண்டளையாகும். இவ்வாறு இரு 'வெண்தளை'களும் வெண்பாவில் கலந்து வரும்.

கலித்தளை
~~~~

காய்முன் நிரை வருவது 'கலித்தளை'யாகும். அதாவது, வெண்சீர் வெண்டளைக்கு மாறாக வருவது கலித்தளை. கலித்தளை கலிப்பாவுக்கு உரியது.

காட்டு 👇

'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'

   நீ/ரா/ரும்              கட/லுடுத்/த
நேர்/நேர்/நேர்      நிரை/நிரை/நேர்
தே/மாங்/காய்      கரு/விளங்/காய்

நில/மடந்/தைக்     கெழி/லொழு/கும்
நிரை/நிரை/நேர்    நிரை/நிரை/நேர்
கரு/விளங்/காய்     கரு/விளங்/காய்

இதில் காய்ச்சீர்முன் நிரை வந்ததால் கலித்தளை ஆயிற்று.

வஞ்சித்தளை
~~

கனிமுன் நிரை வந்தால் -  ஒன்றிய வஞ்சித்தளை
கனிமுன்  நேர் வந்தால் - ஒன்றாத வஞ்சித்தளை

காட்டு 👇

'மைசிறந்தன மணிவரை'

  மை/சிறந்/தன         மணி/வரை
நேர்/நிரை/நிரை      நிரை/நிரை
கூ/விளங்/கனி         கரு/விளம்

இதில் கனிமுன் நிரை வந்ததால் 'ஒன்றிய வஞ்சித்தளை'யாகும்

'பொய்சிறந்தனர் காதலர்'

பொய்/சிறந்/தனர்      கா/தலர்
நேர்/நிரை/நிரை         நேர்/நிரை
கூ/விளங்/கனி             கூ/விளம்

இதில் கனிமுன் நேர் வந்ததால் 'ஒன்றாத வஞ்சித்தளை'யாகும்.  இவ்விரு தளைகளும் 'வஞ்சிப்பாவில்' பயின்று வரும்.

இவற்றைப் பயில்க.

Sunday, November 6, 2022

​பாடம் - 6: தளை

பாடம் - 6


தளை
---------

சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று  பெயர். 
தளை என்பதற்குக் 'கட்டு' என்று பொருள்.
தளைதல் - கட்டுதல். இரண்டு சீர்களை ஒன்றாகத் தளைதல்.

1.நேர் ஒன்றிய ஆசிரியத்தளை
2. நிரை ஒன்றிய ஆசிரியத்தளை
3. இயற்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை
5. கலித்தளை
6. ஒன்றிய வஞ்சித்தளை
7. ஒன்றாத வஞ்சித்தளை

எனத் தளை ஏழு வகைப்படும்.

தளைகொள்ளும்போது, 'நின்றசீர்' இன்னசீர் என்றும், அதாவது மாச்சீரா, விளச்சீரா, காய்ச்சீரா, கனிச்சீரா என்றும்;
'வருஞ்சீரின்' முதலசை நேரசையா, நிரையசையா என்றும் பார்க்கவேண்டும். வருஞ்சீர் இன்ன சீர் என்று பார்க்கவேண்டியதில்லை. 

நின்றசீர் - முதலில் உள்ள சீர்
வருஞ்சீர் - அந்த நின்ற சீரோடு வந்து சேரும் சீர். 

காட்டு 👇

கற்க ^ கசடற

கற்க - நின்றசீர்
கசடற - வருஞ்சீர்

நின்றசீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் 'ஒன்றுதலும் ஒன்றாமையும்'   தளை எனப்படும்.

ஒன்றுதல் - நேருக்கு நேரும், நிரைக்கு நிரையும் வருதல்

ஒன்றாமை - நேருக்கு நிரையும், நிரைக்கு நேரும் வருதல்

ஒன்றுதல் - பொருந்துதல்
ஒன்றாமை - பொருந்தாமை

ஈறு - இறுதி, கடைசி
ஈற்றசை - சீரின் கடைசியில் நிற்கும் அசை
முதலசை - சீரின் முதலில் நிற்கும் அசை

மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் என்னும் நின்ற சீர்களின் ஈற்றசையாகிய 'நேர், நிரையோடு, வருஞ்சீரின் முதலசையாகிய 'நேரும் நிரையும்' ஒன்றுதலும் ஒன்றாமையும் 'தளை' எனப்படும் என்பது கருத்து.

1.மாமுன் நேர்வரின் - நேர் ஒன்றிய ஆசிரியத்தளை

2. விளம் முன் நிரைவரின் - நிரை ஒன்றிய ஆசிரியத்தளை

3. மாமுன் நிரை வரினும், விளம் முன் நேர் வரினும் - இயற்சீர் வெண்டளை

4. காய்முன் நேர் வரின் - வெண்சீர் வெண்டளை

5. காய்முன் நிரை வரின் - கலித்தளை

6. கனிமுன் நிரை வரின் - ஒன்றிய வஞ்சித்தளை

7. கனிமுன் நேர் வரின் - ஒன்றாத வஞ்சித்தளை

இவற்றை நினைவில் நிறுத்துக.