Saturday, November 19, 2022

​பாடம் -10: தொடை

பாடம் -10


தொடை
--------------

அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடை எனப்படும். இரண்டு அடிகளிலே அன்றி, ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.

செய்யுளின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை உறுப்பு மிகவும் இன்றியமையாததாகும். 
'தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்' என்னும் பழமொழி இதனை விளக்கும்.

தொடையானது முதல்தொடை, உறழ்ச்சித்தொடை என இருவகைப்படும்.

அடிகளில் வருவது முதல்தொடை. ஓரடியிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை.

முதல்தொடை
-----------------------

1. மோனைத்தொடை
2. எதுகைத்தொடை
3. முரண்தொடை
4. இயைபுத்தொடை
5. அளபெடைத்தொடை

என முதல்தொடை ஐந்து வகைப்படும்.

மோனைத்தொடை
~

இரண்டு அடிகளில் முதற்சீரின் முதலெழுத்து, அல்லது  ஓரடியிலுள்ள சீர்களின் முதலெழுத்து ஒன்றி வருதல் மோனை எனப்படும். அடிகளில் மோனை வருதல் 'அடிமோனை' எனவும், சீர்களில்  மோனை வருதல் 'சீர்மோனை' எனவும் பெயர்பெறும். ஏனைய எதுகை முதலிய தொடைகளுக்கும் இது பொருந்தும்.

ஒன்றுதல் - ஒரே எழுத்து வருதல்.

காட்டு 👇

'செந்தமிழைக் கற்றுத் தெளியா மகனொருவன்
செந்தமிழன் ஆவனோ தேமொழீ'

இவ்வடிகளின் முதற்சீரின் முதலெழுத்து 'செ' ஒன்றி வந்திருத்தல் 'அடிமோனை' யாகும்.

'மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிரா'

இவ்வடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து 'ம' ஒன்றி வந்திருத்தல் 'சீர்மோனை' யாகும்.

எதுகைத்தொடை
~~~~

இரண்டாவது   எழுத்து ஒன்றி வருதல் எதுகையாகும்.

காட்டு 👇

'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு 
புண்ணுடையர் கல்லா தவர்'

இவ்வடிகளின் முதற்சீரில் இரண்டாவது எழுத்து 'ண்' ஒன்றி வந்திருத்தல் எதுகையாகும்.

'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு'

இவ்வடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து 'து' வந்திருத்தல் மோனை.
இரண்டாவது எழுத்து 'ப்' வந்திருத்தல் எதுகை.

முரண்தொடை
~~~

முரணத் தொடுப்பது முரண் தொடையாகும்.

முரணுதல் - மாறுபடுதல்.
மாறுபட்ட சொற்கள் வருதல் முரண்தொடை.

காட்டு 👇

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'
முன் × பின்  - முரண்

'வெண்பற் கருங்குழலார் மேலிருந்து கீழ்நோக்கி'

வெண்மை × கருமை - முரண்
மேல் × கீழ்  - முரண்
  
இயைபுத்தொடை
~

இரண்டு அடிகளின் இறுதி ஒன்றி வருதல் இயைபுத் தொடையாகும். 

காட்டு 👇

'வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்'

'கொஞ்சும் - கெஞ்சும்' என்பது இயைபுத் தொடை. இத்தொடை பெரும்பாலும் இசைப்பாடல்களில் வரும்.

அளபெடைத்தொடை
~~~

அளபெடுத்து ஒன்றி வருதல் அளபெடைத் தொடையாகும்.

காட்டு 👇

'ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்'

'ஓஒ - ஆஅ'  என அளபெடுத்ததால் இது அளபெடைத் தொடையாகும்.

குறிப்பு 👇

மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் தொடை ஐந்தில்,  'மோனையும் எதுகையும்' மிகவும் இன்றியமையாதவை என அறிக.

இவற்றை மனத்துள் நிறுத்துக.

ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

No comments:

Post a Comment