Sunday, November 6, 2022

​பாடம் - 5: சீர் தொடர்ச்சி

 பாடம் - 5


சீர் தொடர்ச்சி
-----------------------

அசைச்சீர் - 2
~

நேர், நிரை என்னும் அசை இரண்டும் வெண்பாவின் ஈற்றில் சீராக வரும். அவை அசைச்சீர் எனப்படும்.

நேர்  - நாள்
நிரை - மலர்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

தாய் - நேர் - நாள்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

தவர் - நிரை - மலர்

க, கா, கல், கால் }  நேர் - நாள்

கட, கடல், கடா, கடாம் } நிரை - மலர்

நேரசை நிரையசைக்குரிய இவ்வெட்டெழுத்துக்களும் வெண்பாவின் ஈற்றில் வரும்.


காசு, பிறப்பு
~

வெண்பாவின் ஈற்றில் நாள், மலர் என்னும் அசைச் சீர்களேயன்றிக், காசு பிறப்பு என்னும் வாய்பாட்டுச் சீர்களும் வரும்.

தனிக்குறில் (க) ஒழிந்த நேரசை எழுத்துக்கள் மூன்றனோடும் 'கு, சு, டு, து, பு, று' என்னும் வல்லின உகரம் சேர்தல் 'காசு' எனப்படும்.

நிரையசை எழுத்துக்கள் நான்கனோடும் 'கு, சு, டு, து, பு, று' சேர்தல் பிறப்பு எனப்படும்.

👉 பழந்தமிழ்ப் புலவர்கள் காசு என்னும் நேரசை உகரத்தை 'நேர்பு' எனவும்,
பிறப்பு என்னும் நிரையசை உகரத்தை 'நிரைபு' எனவும் கொண்டனர். (இவ்வாறும் வழங்கப்பெறும் என அறிக.)

காசு -> நேர்பு
பிறப்பு -> நிரைபு

நேரசை உகரம் - நேரசையோடு 'கு சு டு து பு று' என்னும் வல்லின உகரம் சேர்ந்தது

நிரையசை உகரம் - நிரையசையோடு 'கு சு டு து பு று' என்னும் வல்லின உகரம் சேர்ந்தது.

காட்டு 👇

கல்    - பந்து
கா     -  மாடு
கால்  - காப்பு

இவை நேரசையுகரம். நேர்பு, காசு.

கட     - விறகு
கடல்  - வடக்கு
கடா   - தகாது
கடாம்  - நடாத்து

இவை நிரையசையுகரம். நிரைபு, பிறப்பு.


வற்றல் மரந்தளிர்த் 'தற்று'  - காசு
நன்கலம் நன்மக்கட் 'பேறு'  - காசு
தானமிழ்தம் என்றுணரற் 'பாற்று' - காசு 


பசும்புல் தலைகாண் 'பரிது'  - பிறப்பு
வானின் றமையா 'தொழுக்கு' - பிறப்பு

மறத்திற்கு முண்டோ 'மலைவு' - பிறப்பு

காசு, பிறப்பு என்பன குற்றியலுகர வாய்பாடு. சிறுபான்மை 'மலைவு' என்பதுபோல்  முற்றியலுகரமும் வரும்.

👉 தனிக்குறிலோடு 'கு சு டு து பு று' சேரின் 'தகு,   கொசு,  மடு, அது,  தபு, பெறு'  எனக் குறிலிணையாய் (இருகுறிலாய்)  நிரையசையில் அடங்கும்.

நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளைத் 'திருக்குறள், நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்கள், நளவெண்பா, வெண்பாமாலை முதலிய வெண்பா நூல்களில் காண்க.

பயிற்சி
-------------

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம்  மழை.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


அன்பர்கள் இக்குறட்பாக்களில் பயின்றுவந்த  சீர்களை அசைபிரித்து வாய்பாடு எழுதிக் காட்டுக. 


காட்டு 👇

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

வா/னின் - நேர் நேர்  - தேமா
றுல/கம் - நிரை நேர் - புளிமா
வழங்/கி - நிரை நேர் - புளிமா
வரு/தலால் - நிரை நிரை - கருவிளம்
தா/னமிழ்/தம் - நேர் நிரை நேர் - கூவிளங்காய்
என்/றுண/ரற்  - நேர் நிரை நேர் - கூவிளங்காய்
பாற்று -  நேர்பு. காசு.

இவ்வாறு.

ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

No comments:

Post a Comment