அனைவருக்கும் வணக்கம்.
மரபுப்பா இயற்றும் விருப்பம் கொண்டு இக்குழுவில் இணைந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன்.
30.10.2022 ஞாயிற்றுக்கிழமை வகுப்பு தொடங்கும்.
ஆசிரியர்: செ. வெங்கடேசு ஐயா அவர்கள்,
ஏகாபுரம்,
சேலம் மாவட்டம்.
நெசவுத்தொழில் செய்து வருபவர். சில பதிப்பகங்களின் மெய்ப்புத் திருத்துநராகவும் பணியாற்றி வருகிறார்.
சென்னையைச் சார்ந்த பொறியாளரும் மொழி ஆர்வலருமாகிய அரங்கனாரிடத்தில் பா எழுதும் பயிற்சியை நன்கு கற்றவர்.
பள்ளி கல்லூரி மாணவர்க்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் சில ஆண்டுகளாகப் பா எழுதும் பயிற்சியளித்து வருகிறார்.ஐயா அவர்களின் கவித்திறனுக்குச் சான்று

வாராய் அன்றோ
°°°°°°°°°°°°°°°°°°°°°
கதிர்பிறந் துலக மெல்லாங்
காரிருள் நீக்கும் வேளை
அதிபுகழ் வாய்ந்த நங்காய்
அன்பன்முன் வந்தாய் அல்லை
எதுகையில் பாட்டுப் போலும்
இழையிலா நாடா போலும்
நிதியிலாச் செல்வ னானேன்
நேரிழாய் வாராய் அன்றோ.
இருங்கடல் கிழித்து வெய்யோன்
இளங்கதிர் பாய்ச்சுங் காலை
அருங்கதிர் திங்க ளன்னாய்
அருள்செய வந்தாய் அல்லை
விருந்தெனப் புசித்த கண்கள்
விதியென வாட லாமா
பெருந்தவ நங்காய் வந்தென்
பெருந்துயர் அறுப்பாய் அன்றோ.
இளம்பனி கொட்டுங் காலை
இளமதி யன்ன நங்காய்
வளர்முலை சுமந்து வந்தென்
வாட்டத்தைத் தீர்த்தாய் அல்லை
குளமொளிர் மரைப்பூ வன்னாய்
குலத்தினைக் காக்க வந்தென்
உளந்தனுக் கருளாய் இன்ப
உலகினுக் கேக வன்றோ.
ஒண்சுடர் மதிய மன்னாய்
ஒளிதிகழ் வெய்யோன் தோன்றி
நண்பகல் பொழுது மாக
நங்கைநீ வந்தாய் அல்லை
தண்மதி யில்லா வானம்
தனிப்பட்டது போலும் ஆனேன்
கண்மணி வந்தென் நெஞ்சக்
கவலறுத் துய்ப்பாய் அன்றோ.
உச்சிமேல் வெய்யோன் தோன்றி
உருத்தும்போ தான போதும்
நச்சினார்க் கருள்செய் யீசன்
நங்கைநீ வந்தாய் அல்லை
இச்சைசேர் நெஞ்சந் தன்னை
எரித்தழிக் காமல் வந்து
மச்சஞ்சேர் முகத்தைக் காட்டி
மகிழ்வுறச் செய்வாய் அன்றோ.
உடம்பெலாம் வியர்வை பூக்க
உச்சிமேல் வெய்யோன் வந்தான்
கொடும்பிறை புருவங் கொண்ட
கோதைநீ வந்தாய் அல்லை
சுடர்மிகு மரைப்பூ வன்ன
சுரும்புணும் முகத்தோய் நீயென்
இடர்ப்படு நெஞ்சைக் காக்க
இப்போதே வாராய் அன்றோ.
கடல்குளித் தெழுந்த வெய்யோன்
கடுங்கதிர் பாய்ச்சும் வேளை
அடல்மிகு புருவங் கொண்ட
அன்னாளே வந்தாய் அல்லை
படல்படு ஆநிரைபோல்
பாவமாய்க் கிடக்கின் றேனே
மடல்படு நெஞ்சை வந்து
மகிழ்விக்கச் செய்வாய் அன்றோ.
எற்படு பொழுது தாண்டி
எல்லவன் கடலைச் சேர
முற்படு வேலை யாயும்
முழுநிலா வந்தாய் அல்லை
விற்படு நெஞ்சம் போல
விம்முதென் நெஞ்சம் காணாய்
கற்படு சிலையா காமல்
காட்சிநீ தருவாய் அன்றோ.
ஒளிமிகு வெல்லோன் பௌவத்
தொடுங்கிய வேளை வந்தும்
அளிகுலம் மொய்க்கும் கோதாய்
அளிசெய வந்தாய் அல்லை
வெளிப்பட வொண்ணாத் துன்பம்
வெருட்டவே கிடக்கும் நெஞ்சைக்
களிப்புறச் செய்ய இன்றே
கனிந்துமுன் வாராய் அன்றோ.
பஞ்சுசேர் உருவத் தன்னாய்
பைந்தமிழ் நங்காய் என்றன்
நெஞ்சுசேர் கவலை தன்னை
நினைவிலே கொண்டாய் அல்லை
கொஞ்சுமா மதியத் தன்ன
குலவிளக்கே நீ வந்து
கொஞ்சினால் உலக மேழும்
கொண்டதாய் மகிழ்வேன் அன்றோ.
No comments:
Post a Comment