Tuesday, November 8, 2022

​பாடம் - 7: தளைத் தொடர்ச்சி

பாடம் - 7


தளைத் தொடர்ச்சி
-----------------------------

ஆசிரியத்தளை
~~~

மாச்சீர்முன் நேர் வருவது - நேரொன்றாசிரியத்தளை

விளச்சீர் முன் நிரை வருவது - நிரையொன்றாசிரியத்தளை

தேமா, புளிமா இரண்டும் நேரீற்று ஈரசைச்சீர் என்பதையும், கருவிளம் கூவிளம் இரண்டும் நிரையீற்று ஈரசைச்சீர் என்பதையும் நினைவுகூர்க.

மாமுன் நேர் - நேர் முன் நேர்
விளமுன் நிரை - நிரை முன் நிரை.

காட்டு  👇

'சீரைத் தேடின் ஏரைத் தேடு'

சீ/ரைத்       தே/டின்
நேர்/நேர்     நேர்/நேர்
தே/ மா         தே/மா

ஏ/ரைத்          தே/டு
நேர்/நேர்       நேர்/நேர்
தே/மா           தே/மா

இது 'மா' முன் நேர் வந்ததால் நேரொன்றிய ஆசிரியத்தளை.

'அறம்செய விரும்பு'

அறம்/செய       விரும்/பு
நிரை/நிரை       நிரை/நேர்
கரு/விளம்         புளி/மா

இது விளம் முன் நிரை வந்ததால் நிரையொன்றிய ஆசிரியத்தளை.

👉 இவ்விரு தளைகளும் ஆசிரியப்பாவில் பயின்றுவரும்.

குறிப்பு👇

இவ்வாறு சீர்களை அசைபிரித்து வாய்பாடு கண்டு, தளை கொள்ளுதல் 'அலகிடுதல்' எனப்படும் என அறிக.


இயற்சீர் வெண்டளை
~~~

மாமுன்  நிரையும், விளமுன் நேரும் வருவது 'இயற்சீர் வெண்டளை' யாகும்.
அஃதாவது, முற்கூறிய ஆசிரியத் தளையிலிருந்து மாறி வருவது 'இயற்சீர் வெண்டளை' எனப்படும். நின்றசீர் இயற்சீரானதால் இயற்சீர் வெண்டளை எனப்பட்டது. வருஞ்சீர் காய்ச்சீராகவும் இருக்கலாம். ஆனால், வருஞ்சீரின் முதலசையே நாம் பார்க்க வேண்டியது என அறிக.

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும்  நான்கே இயற்சீராகும்.

ஆசிரியத்தளை நேருக்கு நேரும், நிரைக்கு நிரையும் வருவது.
இயற்சீர் வெண்டளை நேருக்கு நிரையும், நிரைக்கு நேருமாக, ஆசிரியத்தளையிலிருந்து மாறி வருவது.

காட்டு 👇

'வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி'

வாழ்/க          தமிழ்/மொழி
நேர்/நேர்       நிரை/நிரை
தே/மா            கரு/விளம்

தமிழ்/மொழி     வாழ்/க
நிரை/நிரை       நேர்/நேர்
கரு/விளம்          தே/மா

மாமுன் நிரையும், விளமுன் நேரும் வந்ததால் இது 'இயற்சீர் வெண்டளை' யாகும்.

வெண்சீர் வெண்டளை
~~~~

காய்ச்சீர் முன் நேர்  வருவது 'வெண்சீர் வெண்டளை' யாகும்.

காட்டு 👇

'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்'

கெட்/டா/லும்       மேன்/மக்/கள்
நேர்/நேர்/நேர்     நேர்/நேர்/நேர்
தே/மாங்/காய்       தே/மாங்/காய்

மேன்/மக்/க         ளே/சங்/கு
நேர்/நேர்/நேர்      நேர்/நேர்/நேர்
தே/மாங்/காய்       தே/மாங்/காய்

சுட்/டா/லும்        வெண்/மை   தரும்
நேர்/நேர்/நேர்     நேர்/நேர்      நிரை
தே/மாங்/காய்    தே/மா         மலர்

இதில், காய்முன் நேர் வந்ததால் வெண்சீர் வெண்டளையாகும்

👉 மேலும், 'வெண்மை தரும்' என்பதிலே மாமுன் நிரை வந்தது இயற்சீர் வெண்டளையாகும். இவ்வாறு இரு 'வெண்தளை'களும் வெண்பாவில் கலந்து வரும்.

கலித்தளை
~~~~

காய்முன் நிரை வருவது 'கலித்தளை'யாகும். அதாவது, வெண்சீர் வெண்டளைக்கு மாறாக வருவது கலித்தளை. கலித்தளை கலிப்பாவுக்கு உரியது.

காட்டு 👇

'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'

   நீ/ரா/ரும்              கட/லுடுத்/த
நேர்/நேர்/நேர்      நிரை/நிரை/நேர்
தே/மாங்/காய்      கரு/விளங்/காய்

நில/மடந்/தைக்     கெழி/லொழு/கும்
நிரை/நிரை/நேர்    நிரை/நிரை/நேர்
கரு/விளங்/காய்     கரு/விளங்/காய்

இதில் காய்ச்சீர்முன் நிரை வந்ததால் கலித்தளை ஆயிற்று.

வஞ்சித்தளை
~~

கனிமுன் நிரை வந்தால் -  ஒன்றிய வஞ்சித்தளை
கனிமுன்  நேர் வந்தால் - ஒன்றாத வஞ்சித்தளை

காட்டு 👇

'மைசிறந்தன மணிவரை'

  மை/சிறந்/தன         மணி/வரை
நேர்/நிரை/நிரை      நிரை/நிரை
கூ/விளங்/கனி         கரு/விளம்

இதில் கனிமுன் நிரை வந்ததால் 'ஒன்றிய வஞ்சித்தளை'யாகும்

'பொய்சிறந்தனர் காதலர்'

பொய்/சிறந்/தனர்      கா/தலர்
நேர்/நிரை/நிரை         நேர்/நிரை
கூ/விளங்/கனி             கூ/விளம்

இதில் கனிமுன் நேர் வந்ததால் 'ஒன்றாத வஞ்சித்தளை'யாகும்.  இவ்விரு தளைகளும் 'வஞ்சிப்பாவில்' பயின்று வரும்.

இவற்றைப் பயில்க.

ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

No comments:

Post a Comment